Published : 06 Aug 2014 12:07 PM
Last Updated : 06 Aug 2014 12:07 PM

தூக்கு தண்டனை: மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு

தூக்கு தண்டனை ஒழிப்பு தொடர்பான மத்திய அரசின் பதில் மனித நேய ஆர்வலர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழித்து, ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்படவுள்ள மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நாடாளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்கும் திட்டம் எதுவும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தூக்கு தண்டனை ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சரின் பதில் மனித நேய ஆர்வலர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.

தேசத் தந்தை மாகத்மா காந்தி தூக்கு தண்டனையை கடுமையாக எதிர்த்தார். ஒருவர் கொடுமையான குற்றத்தை செய்து விட்டார் என்பதற்காக அவருக்கு அதே கொடுமையான தன்டனையை வழங்குவது மனிதத் தன்மையல்ல என்பது தான் காந்தியடிகளின் நம்பிக்கையாக இருந்தது.

அதனால் தான், "கண்ணுக்கு கண் என பழி வாங்கத் தொடங்கினால், ஒரு கட்டத்தில் உலகில் அனைவரும் குருடர்களாகத் தான் இருப்பார்கள்" என்று கூறினார். வன்முறையின்மையின் அடையாளமாகத் திகழ்ந்த காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் இன்னும் தூக்கு தண்டனை நீடிப்பது இந்தியர் அனைவருக்கும் அவமானமாகும்.

குற்றம் செய்தவர்களுக்கு இழைக்கப்படும் தண்டனை அவர்களைத் திருத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, உயிரைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 10 வகையான பிரிவுகளின் கீழ் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தியா விடுதலையடைந்த பின் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. தூக்கு தண்டனை விதிப்பதால் எந்த பயனும் ஏற்படாது என்பதை நிரூபிப்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது.

உலகில் 140 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை இன்னும் நடைமுறையில் உள்ளது. உலகின் 90% தூக்கு தண்டனை ஆசியாவில் தான் நிறைவேற்றப்படுவதாக ஐ.நாவின் புள்ளிவிவரம் கூறுகிறது. தூக்கு தண்டனையை ஒழிக்கும் நோக்குடன் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. பொது அவையில் தீர்மானம் கொண்டு வரப்படுவது வழக்கம். கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இத்தகைய தீர்மானத்திற்கு ஆதரவாக 110 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 39 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.

நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருப்பதாக கூறப்படும் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகள் கூட மரண தண்டனையை ஒழிப்பதற்கான தீர்மானத்திற்கு ஆதரவளித்த நிலையில், இந்தியா, சீனா, ஜப்பான், ஈரான், தென்கொரியா உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகள் தான் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன என்பது வருத்தத்திற்குரிய விசயமாகும். தண்டனை வழங்குவதில் ஆசிய நாடுகள் எந்தளவுக்கு நாகரீகமடைய வேண்டியிருக்கிறது என்பதற்கு இது உதாரணமாகும்.

காந்தியடிகள் வழியில் நடக்க வேண்டிய இந்திய அரசு செய்ய வேண்டிய முதல் கடமை தூக்கு தண்டனையை ஒழிப்பது தான். இதற்கு மக்களும் ஆதரவாக உள்ளனர். இதுபற்றி இந்திய சட்ட ஆணையம் கடந்த மே 23 ஆம் தேதி கலந்தாய்வு அறிக்கை ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டது. அதன்படி கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலான பொதுமக்கள் தூக்கு தண்டனையை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழித்து, ஆசிய கண்டத்திற்கு வழிகாட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, உலக அளவிலும் தூக்கு தண்டனையை ஒழிக்கும் நோக்குடன் ஐ.நா. பொது அவையில் வரும் நவம்பர் மாதம் கொண்டுவரப்பட உள்ள மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தும் இந்தியா வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x