Published : 13 Mar 2024 07:46 PM
Last Updated : 13 Mar 2024 07:46 PM

கழிவுநீர் தொட்டி மரணங்கள்: ஆளுநர் ஆ.என்.ரவி வேதனை @ திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த சுராஜ் போர்ட்டல் தொடக்க விழா நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் | படங்கள்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்: “நம் சகோதரர்கள் பலர், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்து விடுவது வேதனையானது. அவர்களின் வாழ்வு பரிதாபத்துக்குரியது. மனிதாபிமானமற்றது. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமாக, சுயமரியாதையுடன் உழைக்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுராஜ் தேசிய போர்ட்டல் தொடக்க விழா நிகழ்வு இன்று நடந்தது. இதில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுராஜ் தேசிய போர்ட்டல் தொடக்க விழா நடந்ததில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியது: ''நம் நாடு மிக வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தில், மிக நீண்ட காலமாக பின்தங்கியிருக்கும் நம் மக்களை விட்டுச் செல்ல முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் அடிப்படை தேவைகளுக்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட வேண்டியிருந்தது வேதனையளிக்கிறது. வளர்ச்சி பற்றி அதிகம் பேசி வருகிறோம். ஆனால், 30 கோடிக்கும் அதிகமான நமது மக்கள், எஸ்சி மக்கள், பழங்குடியினர் என அனைவரும் நாட்டில் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள். அவர்களை எப்படி புறக்கணிக்க முடியும்?

குடும்ப உறுப்பினர்களுடன் நாம் பாகுபாடு காட்ட முடியாது. நாட்டை ஒரு குடும்பம் என்று தான் பார்க்கிறோம். ஒவ்வொரு குடிமகனும் குடும்ப உறுப்பினர், 70 ஆண்டுகள் என்பது 3 தலைமுறைகளாகும். இவ்வளவு பெரிய குடும்ப உறுப்பினர்களை விட்டுச் சென்றால் நாம் வளர முடியாது. அவர்கள் முன்வருவதை உறுதி செய்ய வேண்டும்.

நிகழ்வில் பங்கேற்றவர்களின் ஒருபகுதியினர்.

சுராஜ் போர்ட்டல், அந்த விளிம்புநிலை மக்கள், பின்தங்கியிருப்பவர்கள், கடன் எளிதாக அணுகுவதை உறுதி செய்வதையும், நிதியை எளிதாக அணுகவும் உதவுகிறது. இது வணிகம், கல்வி ஆரோக்கியம், பல்வேறு செயல்பாடுகள் தொடங்குவதற்கானது.

நம் சகோதரர்கள் பலர், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்து விடுவது வேதனையானது. அவர்களின் வாழ்வு பரிதாபத்துக்குரியது. மனிதாபிமானமற்றது. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமாக, சுயமரியாதையுடன் உழைக்க வேண்டும்.

சுய சுதந்திரம், வாழ்வாதாரம் இருந்தால் சுய மரியாதை வரும். அதனால்தான் இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டிருப்பது அரசின் சாதனை. பெண்கள் இத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று அவர் பேசினார். இதில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசின் காப்பீடு அட்டை, எஸ்.சி. எஸ்.டி. மக்களுக்கான தனிநபர் கடன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x