

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்துக்கும், கல்லூரிக்குள் செல்ல முயன்ற மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர்கள் சங்கத்தின் கல்லூரி கிளைச் செயலாளர் எஸ்.கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.பிரதீப், கிளைத் துணைத் தலைவர் ஜேம்ஸ், கிளைக் குழு உறுப்பினர் எஸ்.அபினேஷ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்று, சிஏஏ சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதை கண்டித்து, அதனை திரும்பப் பெற வலியுறுத்தி வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்கள், போராட்டத்தில் பங்கேற்காமல் கல்லூரிக்குள் செல்ல முயன்றனர். இதனையறிந்த அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய மாணவர்கள் சங்கத்தினர், அவர்களை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்ததால், இருதரப்பு மாணவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது பற்றி தகவலறிந்த அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கும்பகோணம் போலீஸார், அந்த இடத்துக்கு வந்து, இரு தரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்து வைத்து, கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.