Published : 13 Mar 2024 12:59 PM
Last Updated : 13 Mar 2024 12:59 PM

“கொங்கு பகுதிக்கு அதிமுக என்ன செய்தது?” - பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி: "கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது? . பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்." என்று பொள்ளாச்சியில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மனநிறைவோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். எந்த தேர்தல் வந்தாலும் திமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்கியதால் தான் தமிழ்நாட்டினுடைய தொழில்வளம் உயருகிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது! பொருளாதாரம் வளருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேறுகிறது.

அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழக மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துகின்ற வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டுகிற நேரம் வந்துவிட்டது.

நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் வரலாற்றை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்கின்ற காலம் வந்துவிட்டது.

10 ஆண்டுகால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா?. கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?. பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்.

மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம். மறந்திட முடியுமா. பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள்.

திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள். ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையைப் பார்த்தார்கள்.

பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி அன்றைய முதல்வர் பழனிசாமியைக் கேட்டபோது, “அப்படியெதுவும் இல்லை. ஆதாரம் இருந்தால் கொடுங்க" என்று சொன்னார். நான் அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது சொன்னேன். இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சயமாக, இதற்குரிய நடவடிக்கையை இந்த ஸ்டாலின் உறுதியாக எடுப்பான் என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்துவிடவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில, அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.

அந்த வழக்கு சிபிஐ விசாரித்து இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதுமட்டுமா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவம் நடந்தது இல்லையா.

அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, போராடியவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது யார் ஆட்சியில்? பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்?. தூத்துக்குடியில், 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றது யாருடைய ஆட்சியில்?.

பாஜக தமிழகத்துக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை திமுக தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாங்கள் தடுக்கிறோமா.

நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு சொல்லுவார்கள். அது மாதிரி, இது மோடி புளுகு. அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்; நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா?. நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ல் அறிவித்தார்கள். அப்போது யார் தமிழகத்தின் முதல்வர்? மறைந்த ஜெயலலிதா இருந்தார். அவர் தடுத்தாரா? இல்லையே.

அடுத்து, உங்கள் நண்பர்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா?. இல்லை, தமிழக மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே?. உங்களை யாரும் தடுக்கவில்லையே. ஆட்சியில் இருந்த பத்து வருஷமாக தமிழகம் மீது திரும்பி பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழக மக்கள் என்ன ஏமாளிகளா?.

பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பாஜகவின் உயிர்மூச்சு. இனி இந்த பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது!

மாநிலத்தைக் கெடுத்த அதிமுக, மாநிலத்தை கண்டு கொள்ளாத பாஜக. இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x