Published : 13 Mar 2024 06:17 AM
Last Updated : 13 Mar 2024 06:17 AM
சென்னை: வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையர் அ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெறுவதற்கு, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், இடைத் தரகர்கள், தனியார் இணைய சேவை மையங்களை பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மக்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. இதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. மேலும், இந்த சேவைகளை பெற, மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டி உள்ளது.
இதை தவிர்க்கவும், எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் இதை மேம்படுத்தவும், நடைமுறை சிக்கல்களை சரிசெய்யவும், மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இந்த சேவையை கொண்டு சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், முதல்வரின் உத்தரவுப்படியும், போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டுதல்படியும் இனி மாநிலம் முழுவதிலும் உள்ள 55,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெற விண்ணப்பிக்கும் முறை மார்ச் 13-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது.
மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு, அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பழகுநர் உரிமத்தை (எல்எல்ஆர்) வழக்கம்போல பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து, மோட்டார் வாகனத் துறை மூலம் மக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் உட்பட) இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT