Published : 13 Mar 2024 08:19 AM
Last Updated : 13 Mar 2024 08:19 AM

தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவி: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தகவல்

திருநெல்வேலி: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்று, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வெள்ளைக்காரர்கள்தான் இந்தியக் கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று, இரு மாதங்களுக்கு முன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். அதேபோல, பலரும் இதுகுறித்து பேசி வருகிறார்கள்.

பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்னர் இந்தியக் கலாச்சாரம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது, உயர் ஜாதியினர் மட்டுமேபடிக்கலாம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம், ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம், சொத்து வாங்கலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால். கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெள்ளைக்காரர்கள் வருகைக்குப் பின்னர் தான் எல்லோரும் கல்வி கற்கும்நிலை ஏற்பட்டது. அவர்கள் மதபோதகர்களாக வந்தாலும், இந்திய, தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள். இலவசமாக கல்வி கொடுத்தார்கள்.

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது. அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே, அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும்.

வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல்,காசிப்பூர் மக்களவை உறுப்பினர்அன்சாரி ஆகியோரது விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதேநடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு, சட்டப்பேரவை முதன்மைச் செயலருடன் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x