Published : 13 Mar 2024 09:07 AM
Last Updated : 13 Mar 2024 09:07 AM

மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்யக் கோரி பரமத்தி காவல் நிலையத்தில் எம்.பி. தர்ணா

பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் நேற்று தர்ணா போராட் டத்தில் ஈடுபட்ட கொமதேக எம்.பி. ஏகேபி.சின்ராஜ்.

நாமக்கல்: மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்ய வலியுறுத்தி பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் நாமக்கல் எம்.பி. தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக காவிரி ஆறுபாய்கிறது. ஆற்றில் சில இடங்களில் மணல் திருட்டு நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. நேற்று முன்தினம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அணிச்சம்பாளையத்தில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்னர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஆட்டோவில் மணல் இருந்ததும், பரமத்தி வேலூர் அருகேயுள்ள அணிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து மணலைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக அணிச்சம்பாளையம் மணிகண்டன் (25), பரமத்தி வேலூர் ராஜலிங்கம் (26), விஜயராஜ் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை பரமத்தி வேலூர் காவல் நிலையம் வந்த நாமக்கல் கொமதேக எம்.பி. ஏகேபி.சின்ராஜ், "மணல் கடத்தல்சம்பவத்தில் தொடர்பு உடையவர்களைக் கைது செய்வது கிடையாது. கூலி ஆட்கள் மட்டும்தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். கடத்தல்காரர்களைக் கைது செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி, காவல் நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த பரமத்தி வேலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான காவல் துறையினர், அவரிடம் பேச்சுவாரத்தை நடத்தினர். 3 நாட்கள் அவகாசம் வழங்கினால், மணல் கடத்தல் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதாக டிஎஸ்பி சங்கீதா உறுதியளித்தார்.

இதையடுத்து, தர்ணா போராட்டத்தைக் கைவிட்ட எம்.பி.சின்ராஜ், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் பரமத்தி வேலூர் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x