Published : 02 Feb 2018 09:31 AM
Last Updated : 02 Feb 2018 09:31 AM

நதிகளை மீட்போம் இயக்க கருத்தரங்கு: தமிழக விவசாய சங்கத் தலைவர்களுடன் ஈஷா மைய நிறுவனர் கலந்துரையாடல்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நதிகளை மீட்போம் இயக்க கருத்தரங்கில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடினார்.

இதில், வேளாண் சாகுபடியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், நதிநீர் அதிகரிப்பு, நீர்ப் பாசனம், ஆரோக்கியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கே.செல்லமுத்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் கூட்டியக்க மாநிலத் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி நல்லசாமி, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கே.வி.ராஜ்குமார், காவிரி விவசாய சங்க நிர்வாகி ஆர்.தண்டபாணி, முன்னோடி விவசாயிகள் தெய்வசிகாமணி, காந்திப்பித்தன், இளங்கீரன், ராஜேந்திரன், எழுத்தாளர் தூரன் நம்பி உட்பட 101 விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

விவசாயிகளிடையே ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: நாட்டின் 40 சதவீத நிலம் விவசாயிகளிடம் உள்ளது. போராட்டங்களில் ஈடுபடுவதைக் காட்டிலும், விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, மகத்தான சக்தியாக மாற வேண்டும். வருங்காலத்தில் அரசுகள் விவசாயிகளின் அரசாக இருக்க வேண்டும்.

தற்போது தனி விவசாயிக்கு வரி கிடையாது. உழவர் விற்பனையாளர் சங்கத்துக்கு வரி விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியதன்பேரில், அந்த வரி விலக்கப்பட்டது.

குமரியில் இருந்து இமயமலை வரை, உலகில் உள்ள அனைத்து பயிர்களையும் விளைவிக்கக்கூடிய அளவுக்கு தட்பவெப்ப நிலை நமக்குள்ளது. ஆனால், தண்ணீர் இல்லாத இடத்தில் கரும்பையும், நெல்லையும் பயிரிடுகிறோம். நிலத்தில் தேவையான அளவு கால்நடைகள், மரங்கள், விலங்குகள் இருந்தால்தான் மண் வளமாக இருக்கும்.

தமிழ்நாடு விவசாயிகளுக்காக ஒரு செயலியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதில், விவசாயம் சார்ந்த அனைத்து தகவல்களும் இருக்கும். சுமார் 15 சதவீத விவசாயிகள், தங்களது குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விருப்பமின்றி இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த, நீர்ப் பாசன முறையில் கவனம் செலுத்த வேண்டும். அரசின் சலுகைகளைப் பெற, உழவர் விற்பனையாளர் சங்கங்களை உருவாக்க வேண்டும்.

அரசு ஒத்துழைக்காமல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x