

மானாமதுரை: தனி நபர் போதைப் பொருளை கடத்தியதற்காக ஒரு கட்சியை பொறுப்பாக்குவது தவறு என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
மானா மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததால் பொன்முடி எம்எல்ஏ, அமைச்சராக தடை யில்லை. நாடு முழுவதும் போதைப்பொருள் இறக்குமதியாகிறது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலுள்ள துறைமுகத்தில் தான் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதை இந்திய அளவிலான பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும். திமுக பிரமுகர் கைதானதால் அதனை தமிழக பிரச்சினையாகவோ, அரசியல் கட்சி பிரச்சினையாகவோ பார்க்கக் கூடாது.
தனி நபர் போதைப் பொருளை கடத்தியதற்கு ஒரு கட்சியை பொறுப்பாக்குவது தவறு. இந்தியாவில் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்க வேண்டும். அவர்களை ஒடுக்குவதற்காகவே உள்நோக்கத்துடன் குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்தனர். அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பது நல்ல எண்ணம். அதை மத ரீதியாக பிரித்துப் பார்ப்பதை ஏற்க முடி யாது. இலங்கை தமிழர்களை இச்சட்டத்தில் சேர்க்காததற்கு விளக்கம் தர வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இச்சட்டத்தை கண்டிப்பாக திரும்ப பெறுவோம்.
வலுவான கூட்டணி: தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் இல்லாதலெட்டர் பேடு கட்சியான சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்ததில் ஆச்சர்யம் இல்லை. தமிழகத் துக்கு வந்தபோதெல்லாம் பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களில் ஒன்று கூட இதுவரை தொடங்கப்பட வில்லை. என்னை பிரச்சாரம் செய்ய கட்சி அழைத்தால் தமிழகம் முழுவதும் செல்ல தயாராக உள்ளேன். எனது தாய் மாமன் நடிகர் கமலஹாசன் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால், எனது வெற்றிக்கு வலு சேர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.