Published : 13 Mar 2024 04:04 AM
Last Updated : 13 Mar 2024 04:04 AM

“சிஏஏ சட்டத்தால் ஓர் இஸ்லாமியர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு” - அர்ஜூன் சம்பத்

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செங்கோல் வழிபாடு செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசளிக்க தயாராக இருப்பதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகப்படியான தொகுதிகளை கைப் பற்றி மீண்டும் பிரதமராக மோடியின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டி வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவ செங்கோல் வழிபாடு நடத்தினார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு முன்பு ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது வரலாற்று பிழை என எதிராக பேசுகிறார். இது திராவிட கலாச்சாரம். இதனை முறியடிக்க வேண்டும். அரசு பணத்தில் கருணாநிதிக்கு பேனா, சிலை திறக்கின்றனர். ஆனால், தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியாஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்து விரோத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. பிரதமர் மோடி ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது.

இந்த அலை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக முதல்வர் குடியுரிமை திருத்த சட்டம் பிரிவினையை உருவாக்கும் என கூறுகிறார். இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒருவராவது பாதிக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் உணர வேண்டும். திட்டமிட்டு இஸ்லாமிய மக்களை ஏமாற்ற திமுக வதந்திகளை கூறி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். சாதி, மத பிரிவினை செய்து தேர்தலை எதிர்கொள்ளக் கூடாது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் கதிர் ஆனந்த் கடந்த தேர்தலில் வெற்றி பெற அதிகளவில் பணம் விநியோகம் செய்தார். இந்த முறை கனிமவள கொள்ளை மூலம் வைத்துள்ள ரூ.60 ஆயிரம் கோடியைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேரந்த திமுக கூட்டணி எம்.பி.க்கள் 38 பேரும் கடந்த 5 ஆண்டுகளும் பிரதமர் மோடியை எதிர்த்து பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக எதுவும் பேசவில்லை. தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 லட்சம் தொண்டர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x