போதைப்பொருள் விற்பனை | புதுச்சேரி அரசைக் கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டம் நடத்திய அதிமுக
மனித சங்கிலி போராட்டம் நடத்திய அதிமுக
Updated on
1 min read

புதுச்சேரி: போதைப்பொருள் விற்பனையை புதுச்சேரி அரசு தடுக்காததைக் கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டத்தை அதிமுக இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியது. புதுச்சேரி அண்ணா சாலையில் அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் மாநில செயலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.

மனிதச் சங்கிலி போராட்டத்தின் போது மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா, கஞ்சா ஆயில் ஸ்டாம்ப், அபின், ஹெராயின் ,பிரவுன் சுகர் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. புதுச்சேரி நகரப் பகுதியில் பப், ரேஸ்ட்ரோபார்கள், கடற்கரைப் பகுதிகள், சுற்றுலாப் பயணிகள் குவியம் இடங்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒரு சில அரசியல் தலைவர்களின் பாதுகாப்புடன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நிகழ்கால இளைஞர்கள் வாழ்க்கை முற்றிலுமாக சீரழிந்து வருகிறது. போதைப்பொருள் உபயோகிக்கும் ஆசாமிகள் கடந்த வாரம் சிறுமியை கொலை செய்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதன் பிறகாவது அரசு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் அரசு அதை செய்யாமல் மவுனம் காத்து வருகிறது.

கஞ்சா உள்ளிட்ட எந்த போதைப் பொருளும் புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அனைத்து போதை பொருட்களும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சர்வசாதாரணமாக கொண்டு வரப்பட்டு பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க எல்லைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையோர் புதுச்சேரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி காவல்துறை இவ்விஷயத்தில் வெறும் பார்வையாளராகவே உள்ளது. புதுச்சேரியில் இரவு முழுவதும் நடைபெற்று வரும் ரெஸ்டோ பார்களை இரவு 11 மணியோடு மூட அரசு உத்தரவிட வேண்டும். மேலும் ரெஸ்டோ பார்களில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என போலீஸார் கண்காணிக்க வேண்டும்.போதைப் பொருட்களை அரசு தடுக்கும் வரை தொடர் போராட்டங்களை அதிமுக நடத்தும். இவ்விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. சரியான நடவடிக்கை எடுக்காததாலும், இளைஞர்கள் எதிர்காலத்தை கருதியும் போராடுகிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in