Published : 12 Mar 2024 07:05 AM
Last Updated : 12 Mar 2024 07:05 AM

தமிழகத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் சாலை பணிகள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

சென்னை: தமிழகத்தில் ரூ.3,111 கோடி மதிப்பிலான 8 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.149 கோடி மதிப்பில் 3 முடிவுற்ற சாலை, பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்கு காணொலியில் திறந்து வைத்தார்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு உட்பட்ட இடங்களில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான, 114 முடிவுற்ற சாலைத் திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்ததுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழகத்தில் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரி வீரேந்தர் சாம்ப்யால், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மண்டல அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் தருமபுரி - சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை-44-ல், தோப்பூர் மலைப்பகுதியில் வாகன ஓட்டிகள்எதிர்கொள்ளும் பிரச்சினைகளை போக்கும் வகையில் ரூ.905 கோடியில் 4 கி.மீ உயர்மட்டச் சாலையுடன் கூடிய, மேம்படுத்தப்பட்ட சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் முதல் ஆந்திர மாநில எல்லை வரையிலான 44 கி.மீ. இருவழிச்சாலை ரூ.1,376 கோடியில் 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதன்மூலம், திருப்பதி செல்லும் பக்தர்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும். இந்த சாலை சென்னை வெளிவட்டச்சாலை, புறநகர் சாலைகளை இணைக்கும். இப்பணிகளுக்கு பிரதமர் நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், ரூ.275 கோடியில், தேசிய நெடுஞ்சாலை-81-ல், கோவை - சிதம்பரம் இடையே 48 கி.மீ தூரத்தை 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்தல், தேசிய நெடுஞ்சாலை-532-ல் கடலூர் - விருதாச்சலம் இடையிலான சாலையில் 43 கி.மீ. தூரத்தை ரூ.295 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்தல், தேசிய நெடுஞ்சாலை-85-ல், 4 கி.மீ அச்சம்பத்து பைபாஸ் சாலை ரூ.260 கோடியில் அமைத்தல் போன்ற பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

திட்டம் தொடக்கம்: கோவை - குண்டல்பேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலை - 181-ல், கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான சாலையில் 10 கி.மீ தொலைவு பகுதி ரூ.29 கோடியில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி - நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலை - 32-ல் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் ரூ.99 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘கடந்த 2014-ம் ஆண்டு 4,985 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் தற்போது 40 சதவீதம் அதிகரித்து, 6,806 கி.மீ. ஆக உள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக ரூ.52,873 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 2,800 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x