Published : 12 Mar 2024 05:30 AM
Last Updated : 12 Mar 2024 05:30 AM

பட்டுப் புழு வளர்ப்பு மையம், விதை உற்பத்தி மையம் 3 பேருக்கு ரூ.1.81 கோடி மானியம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

சென்னை: பட்டு வளர்ச்சித் துறை மூலம், 2 இளம் புழு வளர்ப்பு மையம், ஒரு பட்டுப்புழு விதை உற்பத்தி மையம் அமைத்த 3 பேருக்கு ரூ.1.81கோடி மானியத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பட்டு வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு பட்டு முட்டை உற்பத்தி நிலையத்தின் மூலமும் தரமான மற்றும் நோயற்றபட்டு முட்டை உற்பத்தி செய்யப்பட்டு, பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டு முட்டைத் தேவையைக் கருத்தில் கொண்டும், தரமான பட்டு முட்டைத் தொகுதிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்குத் தடையின்றி வழங்கவும், தனியார் தொழில் முனைவோரை பட்டு முட்டைத் தொகுதிகள் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையிலும், 2023-24-ம் ஆண்டின் பட்டு வளர்ச்சித் துறைக்கானஅறிவிப்பில் ``தனியார் தொழில்முனைவோர் மூலம் ரூ.2.16 கோடியில் ஒரு பட்டுப்புழு விதை உற்பத்திமையம் (வித்தகம்) நிறுவப்படும்'' என அமைச்சர் தா.மோ.அன்பசரன் அறிவித்தார்.

தரமான பட்டு முட்டைகளை உற்பத்தி செய்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கும் நோக்கில் திருப்பூர் மாவட்டம் மானுப்பட்டியில் ரூ.2.16 கோடி மதிப்பில் 30 லட்சம் பட்டு முட்டைகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பட்டு முட்டை உற்பத்திமையம் அமைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.அகல்யா என்ற பெண் தொழில்முனைவோருக்கு உதவித் தொகையாக ரூ.1.62 கோடியை அமைச்சர் வழங்கினார்.

மேலும், அரசு மற்றும் தனியார் வித்தகங்களிலிருந்து நோயற்ற பட்டு முட்டைத் தொகுதிகளைப் பெற்று, பொறித்து, தட்பவெப்ப நிலைகளைப் பராமரித்து ஆரோக்கியமான சூழலில் இளம்புழுக்களை வளர்த்து பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வகையில், இளம் புழு வளர்ப்பு மையங்கள் அமைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கனகராஜ், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.பூபதி, ஆகிய 2 பேருக்கு தலா ரூ.9.75 லட்சம் வீதம் மொத்தம் ரூ.19 லட்சத்துக்கான காசோலையையும் அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் சந்திர சேகர் சாகமுரி ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x