இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மந்தைவெளி மெட்ரோ சுரங்கப்பாதை பணி தீவிரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை - மந்தைவெளி நோக்கி சுரங்கப்பாதைப் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. மொத்தம் 790 மீட்டர் சுரங்கப்பாதை பணியில் இதுவரை 265 மீட்டரை கடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.4கி.மீ) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது.

இந்த வழித்தடத்தில், பசுமைவழிச் சாலையில் இருந்து மந்தைவெளி நோக்கி சுரங்கப்பணி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுபோல, இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகளும், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் இருந்து மந்தைவெளி நோக்கி, சுரங்கப்பாதை பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலை முக்கியப் பகுதியாகும். இங்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பசுமைவழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு மற்றும் பசுமைவழிச் சாலையில் இருந்து மந்தைவெளி நோக்கி 2 சுரங்கப்பாதைகள் அமைக்க தலா 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பசுமைவழிச் சாலையில் இருந்து மந்தைவெளி நோக்கி சுரங்கம் தோண்டும் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதற்காக, `நொய்யல்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 790 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

தற்போது வரை 265மீட்டரை கடந்துள்ளது. இந்தஇயந்திரம் அடுத்த 2 மாதத்தில் மந்தைவெளியை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக 25 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in