

சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை ராமர் கோயில் சிறப்பு பிரசாதத்தை வழங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ளமுக்கிய பிரமுகர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதேபோல், நடிகர் தனுஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ராமர் சிலை நிர்மானிக்கப்பட்ட புனிதகல்லின் ஒரு சிறிய பகுதியையும், ராமர் பட்டாபிஷேகம் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசும் வழங்கப்படுகிறது.
அதன்படி, கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை சார்பில் இந்த சிறப்பு பிரசாதம் நேற்று வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்ததால், பிரசாதத்தை அவரது மனைவி லதா ரஜினி காந்த் பெற்றுக்கொண்டார்.
பிரசாதத்தை சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் ரா.அர்ஜுனமூர்த்தி, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பு செயலாளர் பா.பிரகாஷ், சென்னை மாநகர ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பு செயலாளர் சுதர்சன் ஆகியோர் நேரில் வழங்கினர்.