Published : 12 Mar 2024 06:26 AM
Last Updated : 12 Mar 2024 06:26 AM
இன்று உலக கண் அழுத்த நோய் தினம்
சென்னை: குளுக்கோமா எனும் கண் அழுத்த நோயால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. முழுமையான கண் பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோயை, வரும்முன்பே அறிந்து கண்களை பாதுகாக்க முடியும் என்று சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல் துறை மேலாளர் முனைவர் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது: பார்வை நரம்பு சேதமடைந்து, அதன் விளைவாக பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் அழுத்த நோய்தான் குளுக்கோமா.
அனைவருக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பார்வை இழப்பை தடுக்கும் நோக்கில், உலக குளுக்கோமா கூட்டமைப்பு மற்றும் உலக குளுக்கோமா நோயாளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் ‘உலக குளுக்கோமா வாரம்’ கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டில் மார்ச் 10 முதல் 16-ம் தேதி வரை உலக குளுக்கோமா வாரமாகவும், மார்ச் 12-ம் தேதி (இன்று) உலக குளுக்கோமா தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குளுக்கோமா இல்லா உலகுக்காக ஒன்றுபடுவோம்’ என்பதே இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு கருப்பொருள்.
இந்தியாவில் 1.12 கோடி பேர் உட்பட உலகம் முழுவதிலும் 6.62 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 98 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர்.
நமது கண்ணின் முன் பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம் சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும். பார்வை நரம்பால் தாங்க முடியாத அளவுக்கு இந்த அழுத்தம் அதிகமாகும்போது ஏற்படுவதே குளுக்கோமா நோய். ஆரம்ப நிலையிலேயே இதை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
குளுக்கோமா நோயால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. குறிப்பாக, இந்த நோய் பாதிப்பு உள்ளவரின் குடும்ப உறுப்பினர்கள், ஸ்டெராய்டு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்கள், கண்ணில் அடிபடுபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
கண்ணின் உள் அழுத்தம் அறிதல், பார்வை நரம்பின் அமைப்பு மற்றும் நிறம் மதிப்பீடு செய்தல், முழுமையான பார்வை கள சோதனை, கார்னியா எனப்படும் விழி வெண் படலமும், கருவிழியும் சந்திக்கும் கோணத்தை பரிசோதித்தல் என 4 பரிசோதனைகள் மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது.
நோயின் தன்மை, தீவிரம் ஆகியவற்றை பொருத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். சொட்டு மருந்து, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை மூலமாக கண் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் குளுக்கோமா சிகிச்சை வல்லுநர்கள்.
பார்வை குறைபாடு வருவதற்கு முன்பு, கண்களை காப்பதே சிறந்தது. அதனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்வதன் மூலம் குளுக்கோமா நோயை, வரும்முன்பே அறிந்து கண்களை காக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT