Published : 12 Mar 2024 06:15 AM
Last Updated : 12 Mar 2024 06:15 AM

கலைத்துறையில் சாதனை படைத்த சென்னை கலைஞர்கள் 30 பேருக்கு விருது: ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வழங்கினார்

சென்னை: கலைத்துறையில் சாதனை படைத்த சென்னையை சேர்ந்த 30 கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் விருதுகளை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்கள் மூலம் மாவட்டங்களில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் விருதுகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 30 கலைஞர்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விருதுகளை வழங்கினார்.

அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘கலை முதுமணி விருது’ மற்றும் தலா ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை ஆர்.கே.சித்தன் (நாடகம்), ராதா கல்யாணராமன் (குரலிசை) கி.ஜெயசந்தர் (ஒவியம்) எம்.வேதமூர்த்தி (தமிழிசை) வெ.லோககுரு (ஒவியம்) என்.வி.சுந்தரம் (நாதஸ்வரம்) ஆகியோருக்கு வழங்கினார்.

மேலும், 51 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘கலை நன்மணி விருது’ மற்றும் தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை லதா அரவிந்தன் (நாட்டிய ஆசிரியர்) டி.ஆர்.சேதுராமன் (தவில்) ஜி.கே.ரகுராமன் (நாதஸ்வரம்) எம்.என்.ஹரிஹரன் (மிருதங்கம்) சக்திவேல் முருகானந்தம் (பரதநாட்டிய மிருதங்கம்) ஜெ.ராம்தாஸ் (கடம்) ஆகியோருக்கு வழங்கினார்.

இதுதவிர, 36 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ‘கலைச்சுடர்மணி விருது’ மற்றும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை இரா.ஜெயலலிதா(வீதி நாடகம்), ஹ.நாகநந்தினி (பரதநாட்டிய ஆசிரியர்), ரா.அய்யாதுரை (கிராமிய பாடகர்), ரா.பிரசன்னா ராம்குமார் (நவீன நாடகம்), சா.நியூட்டன் நவீன் பால் (துடும்பாட்டம்), மாம்பலம் எஸ். சிவக்குமார் (நாதஸ்வரம்) ஆகியோருக்கும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ‘கலை வளர்மணி விருது’ மற்றும் ரூ.6 ஆயிரத்துக்கான காசோலையை பா.கிரிதர பிரசாத் (கஞ்சிரா), செ.நாமதேவன் (பரதநாட்டியம்), டி.கலைமகன் (வில்லிசைப் பாடகர்), ஜனனி ராஜன் (குரலிசை), மு.வினோதா (புரவியாட்டம்), வி.மனோஜ் (ஓவியம்) ஆகியோருக்கு வழங்கினார்.

இவை தவிர, 18 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘கலை இளமணி விருது’ மற்றும் தலா ரூ.4 ஆயிரத்துக்கான காசோலையை சாருலதா சந்திரசேகர்(வீணை), தேவி ஹம்சிகா (ஓவியம்), கா.பி.அத (பரதநாட்டியம்), வி.பூ.நிதிஷ் (சின்னத்திரை), மு.வர்ஷினிஸ்ரீ (சிலம்பம்), வைபவ் மகேஷ் (கதாகாலட்சேபம்), ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இளம் கலைஞர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாவட்டக் கலைஞர்கள் 15 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் பா.ஹேமநாதன், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் பா.சாய்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x