‘நாட்டின் பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது’ - சிஏஏ அமல் குறித்து இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது” என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் திங்கள்கிழமை (மார்ச் 11) வெளியானது. இந்நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது..

“பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) மார்ச் 11-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அம்லபடுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.

இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in