Published : 11 Mar 2024 05:09 AM
Last Updated : 11 Mar 2024 05:09 AM
சென்னை: தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகளை தயாரித்து வழங்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளைக் கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அண்மையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், பேருந்து கொள்முதல் தொடர்பான டெண்டர் கோரும் அறிவிப்பை சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,138 வெளிமாவட்ட பேருந்துகள், 1,190 நகரப் பேருந்துகள், நகரப் பயன்பாட்டுக்கான தாழ்தள, எஸ்எல்எப் வகையிலான 672 பேருந்துகள் என 3 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அனைத்தும் பிஎஸ் 6 ரக பேருந்துகளாக இருக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான டெண்டர் அறிவிப்பு வரும் 13-ம் தேதி www.tntenders.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும். ஒப்பந்தம் கோர விரும்புவோர் ஏப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்பட்டவாறு 3 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் தொடர்பான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்த நிதியாண்டில் புதிய பேருந்துகள் இயக்கப்படும்போது, பழைய பேருந்துகள் கழிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT