அதிமுக, பாஜகவினருக்குத்தான் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

அதிமுக, பாஜகவினருக்குத்தான் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் பாஜக, அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அண்ணா அறிவாலயத்தில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் திமுக சட்டப்பிரிவு தலைமை ஆலோசகர் பி.வில்சன் எம்.பி. ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:

திமுகவை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி, அரசியல் ஆதாயம் பெறலாம் என பாஜக தப்பு கணக்கு போடுகிறது. இதற்கு துணையாக அதிமுகவும் உள்ளது. திமுக அரசை களங்கப்படுத்த வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை வரிசையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவை (என்சிபி) இறக்கிவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் குட்கா வியாபாரிகளுக்கு துணையாக இருந்த அமைச்சர், அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எடுக்கப்பட்ட பேப்பரில் ரூ.85 கோடி எந்தெந்த அமைச்சர்களுக்கு தரப்பட்டது என்ற விவரங்கள் உள்ளன. அதில், வருமான வரி, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக பிப்.15-ல் அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்.21-ல் மங்கை திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அப்போது என்சிபி எங்கே போனது. 2013-ல் ஜாபர் சாதிக் மீதான வழக்கில், பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ்தான் அவரை காப்பாற்றினார்.

ஜாபர்சாதிக் போன்றவர்கள் கட்சியை விட்டே நீக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவில்தான் அதிகமான போதைப்பொருள் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

ஜாபர் சாதிக் பற்றி சொல்கிறபோது டெல்லியிலும், வேறு மாநிலத்திலும்தான் போதைப்பொருள் பிடிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை போதைப் பொருள் நடமாட்டத்தை முழுமையாகத் தடுத்துள்ளோம். கஞ்சா பயிர் ஒரு சென்ட் கூட நடப்படாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

போதைப் பொருள் மாநிலம் போல தமிழகத்தை சித்தரித்தால்தான், தமிழக்தின் வளர்ச்சி வட இந்தியாவில் பேசுபொருளாகாது என்பதற்காகவே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் புனிதர்களாகிவிடுகின்றனர்.

ஜாபர் சாதிக் திமுகவை விட்டு நீக்கப்பட்டுவிட்டார். அவருடன் தொடர்புடையவர்கள் பாஜக, அதிமுகவில் தான் இருக்கின்றனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவோம். இவ்வாறு தெரிவித்தார்.

பி.வில்சன் எம்பி கூறியதாவது: தேவையில்லாமல் இந்த விசாரணையில் திமுகவை சிலர் கூறி வருகின்றனர். என்சிபி அதிகாரியின் பேட்டி அவதூறு செய்யும் எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால் அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in