

காரைக்கால்/ புதுக்கோட்டை: காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் காரைக்கால்மேடு கிராமத்தைச்சேர்ந்த எஸ்.கந்தசாமி(43), கிளிஞ்சல்மேடு பி.சுந்தரமூர்த்தி(44) மற்றும் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த கூழையார் எஸ்.காளிதாஸ்(34), ஏ.ராம்(24), தரங்கம்பாடி பி.ஆனந்தபால்(50), பெருமாள்பேட்டை ஆர்.புலவேந்திரன்(42), கே.கவியரசன்(34), ஏ.சிங்காரம்(33), புதுப்பேட்டை ஆர்.மதன்(25), ஆர்.அன்புராஜ்(39), ஆர்.ராஜ்குமார்(23), புதுப்பேட்டை வி.கிஷோர்(29), பொன்னாந்திட்டு எஸ்.நவீன்(22), செருதூர் சி.நவீன்குமார்(18), நாகை எஸ்.செந்தில்(35) ஆகிய 15 பேர் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, மார்ச் 6-ம் தேதி அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் 15மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும், விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து பத்மநாதன், செல்வராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் எஸ்.காளியப்பன்(53), பி.அகிலன்(18), பி.கோடிமாரி(65), எஸ்.சேக்அப்துல்லா(35), கே.தங்கராஜ்(54), ஏ.ஜெயராமன், எஸ்.சரவணன்(24) ஆகியோர் கடலுக்குச் சென்று, நெடுந்தீவு பகுதியில் நேற்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அதிலிருந்த 7 மீனவர்களையும் கைது செய்தனர்.
புதுச்சேரி முதல்வரிடம் முறையீடு: இந்நிலையில், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவகிராமப் பஞ்சாயத்தார் மற்றும்கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஆகியோர், அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் தலைமையில் புதுச்சேரி சென்று, முதல்வர் என்.ரங்கசாமி, மீன்வளத் துறை அமைச்சர் கே.லட்சுமிநாராயணன் ஆகியோரை நேற்று சந்தித்தனர்.அப்போது, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விரைவாக விடுவிக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.