திருவண்ணாமலை அருகே வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றம்: ராமதாஸ் கண்டனம்

திருவண்ணாமலை அருகேயுள்ள நாயுடுமலங்கத்தில் அக்னி கலசம் அகற்றப்பட்டதைக் கண்டித்து திரண்ட பாமகவினர்.
திருவண்ணாமலை அருகேயுள்ள நாயுடுமலங்கத்தில் அக்னி கலசம் அகற்றப்பட்டதைக் கண்டித்து திரண்ட பாமகவினர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது, வன்னியர் சங்கம் சார்பில் 1989-ல் வைக்கப்பட்ட ‘அக்னி கலசம்’ அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமகவினர் மற்றும்வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அக்னி கலசத்தை மீண்டும் வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.

இந்நிலையில், நாயுடுமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று அதிகாலை பாமகவினர் திடீரெனஅக்னி கலசத்தை வைத்துள்ளனர். இதையறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, அனுமதியின்றி வைக்கப்பட்ட அக்னி கலசத்தை அகற்றினர். மேலும், இது தொடர்பாக பாமகவினர் 15 பேரை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமக மூத்த நிர்வாகி செல்வகுமார், முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். "அக்னி கலசத்தை மீண்டும் வைக்கும்வரை போராட்டம் தொடரும்" என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டனை அறிக்கையில், “நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி கலசத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க அனுமதிப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான், பாமக, வன்னியர் சங்கத்தினர் மீண்டும் அக்னி கலசத்தை அமைத்தனர். ஆனால் அதை அகற்றி, பாமகவினரைக் கைது செய்துள்ளனர். அக்னி கலசத்தை மீண்டும் அமைக்காவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in