ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற நபர்கள் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கு ஆலந்தூர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அபுதாபியில் உள்ள தனியார் முன்னணி நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
ஆலந்தூர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இந்த பணி நடைபெறும். இந்த காலி பணியிடங்களுக்கு, ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 6 ஆண்டு பணி அனுபவம் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்ட, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஷட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் ஃபிக்சர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் எண்.42, ஆலந்தூர் ரோடு, கிண்டி சென்னை-600032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும், www.omcmanpower.com என்ற இணையதள முகவரி மற்றும் 044- 22505886, 22502267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் அறியலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஒரகடத்தில் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பஸ்கரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊரக பகுதிகளில் படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக முகாம் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள தெரசாபுரம் கிராமத்தில் உள்ள லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல்வேறு முன்னணி தொழிற்சாலை நிர்வாகத்தினர் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் 16-ம் தேதி நடக்கிறது. இதில் 8-ம் வகுப்பு, மேல்நிலை கல்வி முதல் பொறியியல், பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்புகள் முடித்த 18 வயது முதல் 35 வயதுடைய ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். உடன் உரிய கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்
