Published : 11 Mar 2024 06:20 AM
Last Updated : 11 Mar 2024 06:20 AM

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களின் வீட்டு கடனுக்காக ஈடாக கொடுத்த நிலப்பத்திரங்கள் திருப்பி அளிப்பு

சென்னை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களிடம் அவர்களுக்கு வீடுகட்ட வழங்கப்பட்ட கடனுக்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலப்பத்திரங்களை திருப்பி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலேயர் ஆட்சியில், 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பர்மா, இலங்கை முதலான பல்வேறு காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் வேலை செய்ய ஒப்பந்த தொழிலாளர்களாக பலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு குடிபெயர்ந்தவர்கள் குடிபெயர்ந்த நாடுகளிலேயே தங்கி விட்டனர். ஆனால், அண்டை நாடான இலங்கையில் இவர்கள் நாடற்றவர்களாக இருந்ததாலும், பல்வேறு காரணங்களுக்காக தாயகம் வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், 1964-ம் ஆண்டுஇந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட சிரிமாவோ - சாஸ்திரி உடன்படிக்கையின்படி, 5 லட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி, இந்தியாவில் மறுவாழ்வு வழங்குவதாக இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. 1966 முதல்1984-ம் ஆண்டு வரை இலங்கையிலிருந்து ஏறக்குறைய 5 லட்சம் பேர் தாயகம் வந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தாயகம்திரும்பியவர்களுக்கு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் தலா ரூ.5 ஆயிரம் வியாபார கடனும் வழங்கப்பட்டது. அத்துடன்வீடு கட்டுவதற்காக ஒரு குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ரூ.25 கோடி ரூபாய்அளவுக்கு கடனாக அளிக்கப்பட்டது. இக்கடனுதவி பெறுவதற்கு இவர்கள் தமது நில ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்தனர்.

இவர்களது வறிய நிலையை கருத்தில் கொண்டு கடந்த 1974 முதல் 1999 வரை திருப்பி செலுத்திய கடன் தொகை போக மீதமுள்ளதொகையை அரசு தள்ளுபடி செய்ய முன்வந்தது. ஆனால் இக்கணக்கை நேர் செய்வதில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வாக, கடன்பதிவுகளை நீக்கம் செய்துசீர்படுத்தி முறையாக நிலப்பத்திரங்களை உரியவர்களிடம் திரும்ப அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி கடனுக்காக அடமானம் பெறப்பட்டிருந்த ஆவணங்களை முதல்வர் வழங்கினார். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள 9,742 தாயகம் திரும்பிய குடும்பத்தினர் பயன்பெறுவர். இதன்மூலம், தாயகம் திரும்பிய தமிழர்கள் அவர்களது பட்டா மாற்றவும், கடன் பெறவும், ரெப்கோ வங்கியின் சிறப்பு திட்டங்களின் மூலம் பயன்பெறவும் முடியும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பொதுத்துறை செயலர் க.நந்தகுமார், அயலக தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x