Published : 11 Mar 2024 05:30 AM
Last Updated : 11 Mar 2024 05:30 AM
சென்னை: அக்னிகுல் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் ‘அக்னிபான்’ எனும் சிறியராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த மாத இறுதிக்குள் ஏவப்பட உள்ளது. சென்னை ஐஐடியுடன் இணைந்து ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தரமணியில் இயங்கி வருகிறது.
ராக்கெட் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம், இஸ்ரோ உதவியுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்துள்ளது. சிறிய ரக ராக்கெட்களை தனியார் பயன்பாட்டுக்கு விண்ணில் செலுத்துவதற்காக அந்த ஏவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘அக்னிபான்’ எனும் ராக்கெட்டை அந்த நிறுவனம் தற்போது வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த மாத இறுதிக்குள் ஏவப்பட உள்ளது.
இது சுமார் 300 கிலோ எடை கொண்ட விண்கலத்தை சுமந்து புவியில் இருந்து 700 கி.மீ. தொலைவு வரை செல்லும் திறன் கொண்டது. இரு நிலைகளை கொண்ட அக்னிபான் ராக்கெட் பகுதி கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் இயங்கக் கூடியது. புவியின் துணைவட்டப் பாதையில் ஏவப்பட உள்ள அக்னிபான், தனியார் மூலம் அனுப்பப்படும் 2-வது ராக்கெட் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT