

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், சமீபத்தில் வழங்கப்பட்ட பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றித் தருகிறோம் எனக் கூறி பயனாளிகளிடமிருந்து வருவாய்த் துறையினருடன் சேர்ந்து ஆளுங்கட்சியினர் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாக்கள் முறையாக வருவாய் துறை ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தது.
இதனால் பட்டா வழங்கியும் பயனில்லாமல் போனது. மேலும் பொதுமக்கள் வீடு கட்டவும், கடன் வாங்கவும் முடியாமல் இருந்து வந்தது. எனவே இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய்த் துறை ஆவணங்களில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாவின் ஆவணங்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வீடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய வட்டங்களில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல பட்டாக்கள் இன்னும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இதனிடையே பட்டாவை ஆன்லைனில் பதிவேற்ற ஒவ்வொரு பட்டாவுக்கும் ரூ.2 ஆயிரம் முதல்5 ஆயிரம் என ஆளும் கட்சியினர்பயனாளிகளிடம் வசூலித்து வருவதாகவும் இதற்கு வருவாய்த் துறையினர் உடந்தையாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசின் திட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், வசூல் வேட்டை நடத்தியதாக திமுகவினர் மீது தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாகச் சென்றடையும் வகையில் வசூல் வேட்டையை கட்டுப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினியிடம் கேட்டபோது, “ஆன்லைனில் பதிவு செய்த பிறகுதான் பட்டா வழங்குகிறோம். பயனாளிகள் இதுபற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.