

மேட்டூர்: மேட்டூர் அருகே குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வட மாநில வாலிபரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டம், மிஜாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அனில் சவுத்ரி (26). இவர் பொட்டனேரியில் உள்ள பிரபல தனியார் இரும்பு தயாரிக்கும் நிறுவனத்தில் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் எடுத்துள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அனில் செளத்திரிவுடன், அவரது ஊரைச் சார்ந்த கெந்தாள பஸ்வான் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கெந்தாள பஸ்வான் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், கருமலைக்கூடல் அடுத்த குஞ்சாண்டியூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் அழைத்து வந்துள்ளனர்.
கெந்தாள பஸ்வான் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை பார்த்து கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த அனில் சவுத்ரி வெளியே வந்துள்ளார். அப்போது, மருத்துவமனை எதிரில் நடந்து சென்ற குஞ்சாண்டியூர் பகுதியை சார்ந்த மகாலட்சுமி, 3 வயது குழந்தையை கையை பிடித்து இழுத்து உள்ளார். அப்போது, மகாலட்சுமி சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் குழந்தை கடத்த வந்தவன் என எண்ணி அனில் சவுத்ரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று அனில் சவுத்திரியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயம் அடைந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.