Published : 10 Mar 2024 09:27 AM
Last Updated : 10 Mar 2024 09:27 AM

திமுக 21 இடங்களில் நேரடி போட்டி: தமிழகம், புதுவையில் காங்கிரஸுக்கு 9+1

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவை தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து பயணித்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி திமுக - காங்கிரஸ் இடையே முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதே காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாலோசித்தனர். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 9-ம் தேதிக்கு மேல் நடைபெறும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கடந்த ஒரு மாதமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால், மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் நேற்று மாலை அவசரமாக சென்னை புறப்பட்டு வந்தனர். சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்க பாலு, சு.திருநாவுக்கரசர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தனர்.

பின்னர், கே.சி.வேணு கோபால், முகுல் வாஸ்னிக், அஜோய் குமார், சிரிவெல்ல பிரசாத், செல்வப் பெருந்தகை, ராஜேஷ்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயம் புறப்பட்டு சென்று, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவது என உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் வந்து, செல்வப் பெருந்தகையுடன் சேர்ந்து தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தததில் கையெழுத்திட்டார். பின்னர் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணு கோபால், "எங்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணம். காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் ஆதரவாக இருக்கும். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் திமுகவோடு நட்புறவோடு இருக்கின்றனர். இந்த கூட்டணி தொகுதி பங்கீட்டின் மூலம், திமுக- காங்கிரஸ் இடையேயான நட்பு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளையும் யாராலும் பிரிக்கவே முடியாது. ஒன்றாக போராடுவோம், ஒன்றாகவே வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸூக்கு 9 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த மக்களவை தேர்தலிலும் மேற்கூறிய அதே கூட்டணி கட்சிகளுக்கு, அதே தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x