

விழுப்புரம்: திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியது.
திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், தனது அமைச்சர் பதவியை இழந்தது மட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் இழக்க நேர்ந்தது.
பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த மார்ச் 5-ம் தேதி திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்தார்.
இதையடுத்து, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் திருக்கோவிலூர் தொகுதியின் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் நேற்று தொடங்கியது.
இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் பழனி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிஇடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக்கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியில் எடுத்து, திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்கட்ட பரிசோதனை செய்வதற்காக அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன், தனி வட்டாட்சியர் கணேஷ் மற்றும் அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.