

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படம் இன்று (திங்கள்கிழமை) காலை சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டது.
படத்திறப்பு விழாவுக்கு பின்னர் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, "பூமி உள்ளவரை, ஜெயலலிதாவின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" எனப் புகழாரம் சூட்டினார்.
பேரவையில் அவர் பேசியதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க இந்த சட்டமன்றப் பேரவையில், வரலாறு படைத்த (அம்மாவின்) ஜெயலலிதாவின் திருஉருவப்படத்தை திறந்து வைத்த
சட்டப் பேரவைத்தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வரலாறு படைத்த சாதனைத்தலைவியின் திரு உருவப்படத்தை திறந்து வைக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்பதை என் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன்.
அம்மாவின் வழியில் செயல்படும் இவ்வரசு பதவியேற்று, ஓராண்டை வெற்றிகரகமாக நிறைவு செய்யும் இவ்வேளையில், இந்த விழா நடப்பது, அம்மாவே
நேரில் வந்து ஆசி வழங்குவதைப் போல் உணர்கிறேன்.
இந்த உயிரோட்டமுள்ள ஒவியம், அவரது கம்பீரம், கண்ணியம், ஆளுமை, தாய்மை, மாட்சிமை, பெருந்தன்மை ஆகிய குணங்களை ஒருங்கே தத்ரூபமாக பிரதிபலிக்கின்றது. இந்த உயிரோட்டமுள்ள திரு உருவ ஒவியத்தை தீட்டிய ஒவியரை நான் மனதார பாராட்டுகிறேன்.
ஒருவர் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் சரி, வாழ்ந்து மறைந்த பிறகும் சரி, அனைவரது உள்ளங்களிலும் நீங்காப் புகழைப் பெற்றிருக்க வேண்டுமெனில்,
அதற்குத் தேவை தன்னலமின்மை. இந்தத் தன்னலமின்மைக்கு சொந்தக்காரர் அம்மா.
அவர், மண்ணை விட்டு மறைந்து விண்ணுக்குச் சென்றாலும், நம்முடைய மனங்களில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நிரந்தரமாக வீற்றிருக்கும் தங்க நிகர்த்தலைவி,
பூமி உள்ளவரை, அவரின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர், அஇஅதிமுக -வின் தலைமைப் பொறுப்பினை ஏற்று, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பின்னர் பல சோதனைகளையும், வேதனைகளையும் வெற்றிகரமாக கடந்து 1991 முதல் 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், அவரது திரு உருவப் படத்திற்கு கீழே எழுதப்பட்டுள்ள, அவரது தாரக மந்திரமான அமைதி, வளம், வளர்ச்சி‛ என்ற பாதையில் தமிழ்நாட்டை திறம்பட வழிநடத்தியவர்.
தனக்கென்று ஒரு தனி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், தமிழ்நாட்டின் நலனை, தன் நலன் என்று கருதி, அயராது உழைத்தவர் ஏழைகளுக்காக எண்ணற்ற உன்னதமான முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் தெய்வமாகவே இன்றும் வாழ்கிறார்.
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்‛, என்ற பாரதியின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையிலும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையில் உலகத்திற்கே முன்னோடியாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஏற்படுத்தினார்.
அது மட்டுமன்றி, தமிழ்நாடு பெண்கள் இன்னல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை கடுமையாக்கி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தார்.
சட்டப் போராட்டத்தின் மூலம், தனது தொடர் முயற்சியால், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட செய்தார்.
இது காவிரியை மீட்ட காவியத் தாயின் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். அதே போல முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி அணையின் நீர் தேக்கும் அளவினை 142 அடியாக உயர்த்த ஆணை பெற்றார். நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து வீடு மற்றும் கட்டடங்களும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆணை வெளியிட்டார்.
ஏழைகள் பசி போக்க அம்மா உணவகங்கள்; பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள்; அம்மா குடிநீர், அம்மா மருந்தகங்கள்; முதியோர், விதவை, ஓய்வூதியம்; நெசவாளிகள் மற்றும் வீடுகளுக்கு குறிப்பிட்ட அளவு விலையில்லா மின்சாரம், ஏழைத் திருமணப் பெண்களுக்கு 50,000 ரூபாய் வரை உதவி மற்றும் எட்டு கிராம் தாலிக்கு தங்கம்; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் விலையில்லா மின்விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவைப் பசுக்கள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தார்.
கல்வித்துறையில் மாணவ மாணவியருக்கு 14 வகையான நலதிட்ட பொருட்கள், விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்து வசதி, என பல்வேறு திட்டங்கள், பள்ளிகளை தரம் உயர்த்தல் உயர்கல்வியில் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் பயில்வதற்கு ஏதுவாக, பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பால்டெக்னி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று இதே அவையில் அவர் கூறியதை இங்கே நான் நினைவு கூருகிறேன்.
சாதனை என்றால் அம்மா! சரித்திரம் என்றால் அம்மா! சகாப்தம் என்றால் அம்மா! என்பதை இந்த மண்ணுக்கு உணர்த்தி எங்களையெல்லாம் விட்டு விண்ணுக்குச் சென்ற மனித சக்தி கடந்த மகா சக்தி, ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிர் சக்தி, உலகத் தமிழர்களின் இதய சக்தி, அம்மா என்னும் அற்புத சக்தியின் திருவடியினை மீண்டும் ஒருமுறை பணிந்து வணங்கி, இந்த விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற காரணமாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.