

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஊருணியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். தச்சுத் தொழிலாளி. இவரது மகள்கள் சந்தியா(13), கிருஷ்ணவேணி(10), மகன் இசக்கிராஜா (8) ஆகியோர் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் முறையே 8, 5, 3-ம் வகுப்பு படித்து வந்தனர். விடுமுறை தினமான நேற்று மாலை குழந்தைகள் மூன்று பேரும் அவர்களது சித்தி சண்முககனியுடன் அங்குள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனர்.
சண்முககனி ஊருணி கரையில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். சந்தியா,கிருஷ்ணவேணி, இசக்கி ராஜாஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் மூவரும் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும்ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தட்டப்பாறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பேரூரணி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.