சென்னை மெட்ரோ பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பிரத்யேக மகளிர் உதவி எண் அறிமுகம்
சென்னை: மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பிரத்யேக மகளிர் உதவி எண்ணை(155370) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மையில், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற “பிங்க் ஸ்குவாட்” பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மெட்ரோ ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிரத்யேக மகளிர் உதவிஎண் ( 155370 ) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில், பிரத்யேக மகளிர் உதவிஎண் 155370 அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் 24 மணி நேரமும் பெண்களால் இயக்கப் படும் சேவையாகும்,.மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த உதவி எண் பிஎஸ்என்எல் நெட் வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப் பட்டுள்ளது. மற்ற நெட் வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அனைத்து பெண் பயணிகளும் மகளிர் உதவி எண் 155370-ஐ ( தற்போது பிஎஸ்என்எல் பயன்பாட்டாளர்கள் மட்டும் ) தங்கள் தொலைபேசியில் சேமித்து, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது தேவை ஏற்பட்டால் தயங்காமல் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
