Published : 10 Mar 2024 04:10 AM
Last Updated : 10 Mar 2024 04:10 AM
திருவாரூர்: வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் செய்தாலும், தமிழகத்தில் திமுகதான் வெற்றிபெறும் என அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்த்தனாதபுரம் என்ற இடத்தில் பாமணியாற்றின் குறுக்கே ரூ.3.79 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தார். விழாவில், ஆட்சியர் தி.சாருஸ்ரீ, கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, நகர்மன்றத் தலைவர் மன்னை த.சோழராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால் கர்த்த நாதபுரம், குறுவை மொழி, பாமணி, தேவந்திர புரம் பகுதி கிராம மக்கள் மன்னார்குடி நகருக்குள்ளும், பேருந்து நிலையத்துக்கும் எளிதாக சென்றுவர முடியும்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியதாவது: இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. எதிரணியில் கதவு, ஜன்னல் என அனைத்தும் திறந்து இருந்தாலும் யாரும் செல்லவில்லை. காற்று மட்டுமே வருகிறது.வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு மூலம்தேர்தலை நடத்த வேண்டும் என்பதே பல்வேறு கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் என்ன குளறுபடி நிகழ்ந்தாலும், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சிறு பிள்ளைகளின் விளையாட்டு போல உள்ளது. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும். தஞ்சைக்கு சிப்காட் தொழிற்சாலையையும், மன்னார்குடிக்கு சிறிய தொழில் பூங்காவையும் கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT