Published : 17 Feb 2018 05:16 PM
Last Updated : 17 Feb 2018 05:16 PM

நான் ஓவியனாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது: மகாபாரதம் நூல் வெளியீட்டு விழாவில் சிவகுமார் உருக்கம்

 

நான் ஓவியனாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. என்னை நல்ல நிலையில் வைத்துள்ள கடவுளுக்கு நன்றி என்று நடிகர் சிவகுமார் உருக்கமாகப் பேசினார்.

நடிகர் சிவகுமாரின் மகாபாரதச் சொற்பொழிவு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது அது இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிவகுமார் பேசியதாவது:

''மகாபாரதம் காவியத்தை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத டிவிடிக்கள் இதுவரை விற்றுள்ளன. 'தி இந்து'வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.

குமார் ஒரு நாள் என்னிடம் தான் இதை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்போவதாக கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று எண்ணி, சரி முயற்சியுங்கள் என்றேன். மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. இத்தாலியில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன்.

வாழ்க்கையின் முடிவில் தான் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். நான் 75% வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது வரவு செலவு கணக்கு பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.

கோயம்புத்தூரில் ஒரு சிறிய கிராமத்தில் குடிக்க தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது, கழிப்பிடம் கிடையாது, பள்ளிக்கூடம் கிடையாது, சாலைகள் கிடையாது கிராமத்தில் மொத்தத்தில் 200 பேர் தான். நான் தான் கிராமத்தில் முதலில் எஸ்எஸ்எல்சி முடித்தவன். நான் ஒரு ஓவியனாக மெட்ராஸ் வந்தேன். சண்டிகர் முதல் கன்னியாகுமரி வரை 7 வருடங்கள் நிறைய பயணங்களை மேற்கொண்டேன். மகாபலிபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தங்குவதற்கு அறைகள் கிடையாது. எந்தொவொரு வசதிகளும் கிடையாது. தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வோம். அனைத்து இடங்களுக்கும் மிதிவண்டியை தான் உபயோகிப்போம். திருப்பதிக்கு 35 ரூபாயை வைத்துக் கொண்டு 7 நாட்கள் அங்கு தங்கி சில ஓவியங்களை வரைந்தேன்.

என்னுடைய சிறுவயது முதல் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளேன். உருவப்படம், இயற்கை நிலக் காட்சி ஆகிய இரண்டையும் மிக சிறப்பாக வரைவேன். ஆனால் நான் மிக தாமதமாக பிறந்துள்ளதாகவும் 400 வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால் உங்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது நவீன கலையின் காலம் இதற்கு நான் சரியாக இருக்கமுடியாது என்று பலர் கூறிவிட்டனர்.

அடுத்ததாக திரைப்படத் துறையில் சேர்ந்தேன். எனக்கு திரைப்படத் துறை முற்றிலும் புதியது. அப்போது சிவாஜி , எம்.ஜி.ஆர் போன்றவர்கள் உச்சநட்சத்திரமாக இருந்த காலகட்டம். நாடகங்கள் போடவேண்டும் என்று கூறினார்கள். இந்திய முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களையும், பரதநாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டோம்.

ஸ்ரீ வித்யா 5 வயது முதல் நடனம் கற்றுள்ளார். என்னுடன் நடிக்கும்போது வயது 22. எனக்கு 31 அரங்கில் மொத்தம் 5 டஜன் நடன கலைஞர்கள் என்னுடன் பங்கேற்றார்கள். எனக்கு பரதநாட்டியம் ஜீரோ. அதில் எனக்கு கடவுள் சிவன் கதாபாத்திரம்.

1934 காலகட்டத்தில் இந்தியாவிலேயே 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர் கே.பி. சுந்தராம்பாள். அதன் பின்னர் அவருக்கு 'ஔவையார்' திரைப்படத்தில் 1953-ல் 4 லட்சம் சம்பளம் கொடுத்தனர்.

ராமாயணம், மகாபாரதம் இந்தியாவின் அடையாளம். அதிலும் கம்பர் போன்று யாராலும் எழுதவே முடியாது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். 10,122 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டத்துக்கு மட்டும் 1434 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டம் நூலினை அனைவரது வீட்டிலும் காணலாம். அதில் நான் 5 பகுதியை எடுத்துரைத்துள்ளேன்.

இந்த நிலைமைக்கு கடவுள் தான் காரணம். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் திருவண்ணாமலையில் தாடியுடன் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கடவுள் என்னை நடிகனாக மாற்றி கல்யாணம் செய்ய வாய்ப்பு கொடுத்து இரண்டு குழந்தைகளையும் கொடுத்து இந்த புத்தகங்களுக்கு ஒரு பத்து லட்சம் செலவு பண்ணியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதே போல 75-வது ஆண்டை அடைந்ததற்கு என்னுடைய மகன்கள் அந்த நிகழ்ச்சிக்கு 50 லட்ச ரூபாய் செலவு செய்தார்கள். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. இது போல என்னை நல்ல நிலையில் வைத்துள்ள கடவுளுக்கு நன்றி''.

இவ்வாறு சிவகுமார் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x