Last Updated : 09 Mar, 2024 01:41 PM

17  

Published : 09 Mar 2024 01:41 PM
Last Updated : 09 Mar 2024 01:41 PM

3-வது சக்தி உருவெடுக்கும் காலம் இது: தமிழருவி மணியன் கணிப்பு

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் மூன்றாவது சக்தி உருவெடுப்பதற்கான காலம் இதுதான் என தமிழருவி மணியன் தெரிவித்தார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழருவி மணியன் அளித்த நேர்காணல்:

காந்தி, காமராஜர் வழியில் வந்த காங்கிரஸ்காரரான நீங்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? - நாட்டு நலனுக்காகத் தான் ஆதரிக்கிறேன். 1977-ல் இந்திரா காந்தி என்ற ஒற்றை பெண்மணியை எதிர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கினோம். அந்த கூட்டணிக்கு எந்த லட்சியமும், கொள்கையும் கிடையாது. ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்தது.

அந்த கூட்டணி ஆட்சியையும் கைப்பற்றியது. அதேநேரத்தில் அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரதமர் நாற்காலியில் ஆசை இருந்தது. அதேபோல, இன்று மோடி என்கிற ஒரு தனிமனிதருக்கு எதிராக இண்டியா கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொருக்குக்கும் பிரதமர் நாற்காலியில் கண் இருக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் வேர் விட்டு மரமாக இருக்கும் காங்கிரஸ் தலைமையையும், ராகுல் காந்தியையும் இந்த கூட்டணியில் இருக்கும் யாரும் ஏற்றுகொள்ளக்கூடிய நிலையில் இல்லை. தற்போது, அதே 1977 மீண்டும் திரும்புகிறது.

55 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவால் வளர முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்? - வளர வேண்டும் என நான் நினைக்கிறேன். 55 ஆண்டுகளாக கொள்ளையர்கள் கூடாரமாக இந்த தமிழ்நாடு இருக்கிறது. மாறி மாறி இந்த திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து மக்களுடைய பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து, தங்களது சுகத்துக்காக அரசியலை அசிங்கப்படுத்தக்கூடிய நிலை தொடர வேண்டுமா, இதற்கு மாற்றாக அண்ணாமலை வரும் போது அவரை நான் ஏற்கிறேன். நாளை அண்ணாமலையே தவறு செய்தால், அவரை எதிர்த்து நிற்கக்கூடிய முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

அதிமுகவைவிட திமுகவை வீழ்த்துவது தான் தங்களது பிரதான அரசியல் நோக்கம் என்று கூறப்படுவது பற்றி....? - இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிமுக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது திமுகவிடம் இருந்து தான். தமிழகத்தில், அரசியலில் அத்தனை சீர்கேடுகளையும் தொடங்கி வைத்தது திமுக தான்.

இன்று வரை போதைக் கடத்தலில் ஈடுபடுபவருக்கு புகழிடம் கொடுக்கும் அளவுக்கு வந்திருப்பது திமுக தான். ஒழுங்கீனத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்து, அதை பெரிதாக வளர்த்தெடுத்தது திமுக மட்டுமே. எனவே, அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளிடம் இருந்து தமிழகம் விடுபட வேண்டும்.

பல்லடம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளைப் பற்றி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது பற்றி தங்கள் கருத்து என்ன? - எம்ஜிஆர் ஆட்சியிலும் நிறை, குறை உண்டு. ஏழைகளுக்கு முடிந்தவரை உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வாழ்ந்த மனிதர். நல்லவற்றை எம்ஜிஆர் அதிகம் செய்திருக்கிறார். ஜெயலலிதா எதேச்சதிகார மனபாவத்துடன் கட்சியை நடத்தினார்.

எதிர் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு சகிப்பு தன்மை அற்றவராக இருந்தார். காலில் விழும் கலாச்சாரத்தில் இருந்து, சட்டப்பேரவையை பஜனை மடமாக மாற்றிய வரையில் எல்லாவற்றையும் செய்தவர் ஜெயலலிதா. ஆனால், அவர் தான் ஏழை எளிய மக்களுக்கு பார்த்து பார்த்து நல்லது செய்தார்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் திமுக அணி மிகவும் வலிமையாக உள்ளது. இந்நிலையில் அதிமுக இல்லாத பாஜக அணியால் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? - வெற்றி, தோல்வியை பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு நாளும் மாற்று அரசியலை வளர்த்தெடுக்க முடியாது. மாற்று அரசியலை எதிர்நோக்கி போகும் போது, இது போன்ற பரிசோதனை முயற்சிகளை அண்ணாமலை எடுப்பதற்கு, முதலில் பாஜகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் 100 சதவீதம் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும். மூன்றாவது சக்தி உருவெடுப்பதற்கான காலம் இது தான். அதற்காக தான் அண்ணாமலையின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்.

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயருமா? - நிச்சயம்15 முதல் 20 சதவீதம் என்ற அளவுக்கு உயரும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கிய விஜயகாந்த் அந்த கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்து சுருங்கி போனார். இப்போது கமல்ஹாசனும் திமுகவுடன் கூட்டணி அமைக்க போகிறார்.

வருவார்... வருவார் என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த ரஜினிகாந்த் வராமலேயே போய்விட்டார். இப்போது புதிதாக விஜய் வந்திருக்கிறார். அவரால் வெற்றி பெற முடியுமா? பழைய அனுபவங்களின் மூலமாக அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது தான்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அரசியல் செய்யும் சீமானின் நாம் தமிழர் கட்சியை நீங்கள் ஆதரிக்காதது ஏன்? - நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்துவது. நான் இந்திய தமிழ் தேசியத்தை முன்னிலை படுத்துபவன். அடிப்படையிலேயே எனக்கும், சீமானுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனாலும், திராவிட கட்சிகளுக்கு எதிராக தனித்து நின்று களமாடும் சீமானை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? - அதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x