Published : 09 Mar 2024 06:14 AM
Last Updated : 09 Mar 2024 06:14 AM
புதுச்சேரி: புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி படுகொலையைக் கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினரால் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு திமுக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாகவும், அதிமுக தனியாகவும் அழைப்பு விடுத்திருந்தன.
இதையொட்டி, புதுச்சேரி பெரிய மார்க்கெட், மீன் அங்காடி, நேரு வீதி, காந்தி வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, படேல் சாலை, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதிகளில் இருந்த பெரும்பாலான கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சின்ன மணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க்கெட் கடைகளும் இயங்கவில்லை. எனினும், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின.
புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்கால் உள்ளிட்ட வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக பேருந்துகள் எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன. அதேபோல, டெம்போ,ஆட்டோக்களும் இயங்கவில்லை.உள்ளூர் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின.
அதேநேரத்தில், பொதுத் தேர்வுநடப்பதால், பள்ளிப் பேருந்துகள் இயங்கின. கல்லூரிகளும் செயல்பட்டன. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் சில தொழிற்சாலைகளைத் தவிரபெரும்பாலாவை மூடப்பட்டிருந்தன.
திரையரங்குகளில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான பெட்ரோல் பங்க்-களும் அடைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிறுமியின் படத்துடன் பதாகைகள் வைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுச்சேரி நகரம் முழுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சிறுமியின் வசிப்பிடமான முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் பேனர் வைத்து, அப்பகுதி மக்கள் சிறுமிக்கு அஞ்சலிசெலுத்தினர். போராட்டத்தையொட்டி இண்டியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் தனித்தனியே மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. புதுவை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT