

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காங்கிரஸ் எம்எல்ஏவை ஒருமையில் பேசிய திமுக நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து மயிலாடுதுறை, சீர்காழியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதிய நூலகக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சி நிறைவடையும் தருவாயில் அங்கு வந்த நகர்மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான என்.செல்வராஜ், அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம், தனக்கும், மக்களவை உறுப்பினருக்கும் ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், எம்எல்ஏவுக்கு மட்டும் அழைப்பு விடுத்தால் போதுமா, அவர் திமுகவினர் வாக்குகளையும் பெற்றுத்தானே வெற்றி பெற்றார் என்று கேட்டார்.
மேலும், அங்கிருந்த எம்எல்ஏ எஸ்.ராஜகுமாரிடம், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் ஒருமையில் பேசி வாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எம்எல்ஏ ராஜகுமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எம்எல்ஏவை ஒருமையில் பேசிய திமுக நகர்மன்றத் தலைவரைக் கண்டித்தும், அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சீர்காழியில் நேற்று முன்தினம் இரவும், மயிலாடுதுறையில் நேற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிடவும் காங்கிரஸார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக எம்எல்ஏ ராஜகுமாரிடம் கேட்டபோது, ‘‘கல்லூரி விழாவுக்கு நகர்மன்றத் தலைவரை அழைக்க வேண்டியது, கல்லூரி நிர்வாகம்தானே தவிர, நான் அல்ல.மேலும், அவர் என்னை வெற்றி பெறச் செய்யவில்லை. அவர் பொறுப்பில் உள்ள பகுதியில் எனக்கு 450 வாக்குகள் குறைவாகவே கிடைத்தன. ஆனால், அவர்நகர்மன்றத் தலைவராக தேர்வானதற்கு எங்களது பங்களிப்பும் இருக்கிறது’’ என்றார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், திமுக - காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது, பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.