

கோவை: போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கோவை வஉசி உயிரியல் பூங்கா வளாகத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் திறந்தவெளி படிப்பகம் அமைக்கப்படும் என, மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில், 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிகழ்வு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை வகித்தார். ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணைமேயர் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்புத் திட்டங்கள் குறித்து மேயர் விளக்கினார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ள முக்கிய திட்டங்களின் விவரம்: ஐஸ்வர்யா நகர் முதல் மருதமலை சாலை வரை 30 அடி அகல சாலை, சரவணம்பட்டி துடியலூர் பிரதான சாலை முதல் மீனாட்சி நகர் வழியாக அண்ணாநகர் வரை 60 அடி அகல சாலை, துடியலூர் சரவணம்பட்டி பிரதான சாலையை இணைக்கும் தென்வடல் சாலை ஆகிய மூன்று திட்ட சாலைகள் முதல்கட்டமாக நிறைவேற்றப்படும்.
பில்லூர் முதலாவது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதலாக 30 எம்.எல்.டி குடிநீர் பெற ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கிடக்கும் நீண்ட நாள் கழிவுகளை இரண்டாம் கட்ட திட்டத்தில் பயோ மைனிங் முறையில் அகற்ற ரூ.58.54 கோடி மதிப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உக்கடம் பெரியகுளத்தில் மிதவை சூரியமின்கலன் மூலம் மின்சாரம் தயாரிப்புப் பணி ரூ.1.45 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். ஹாக்கி வீரர்கள் பயன்பெறும் வகையில், சாஸ்திரி மைதானத்தில் ரூ.11.50 கோடி மதிப்பில் 6,500 ச.மீ பரப்பளவில் செயற்கை புல்வெளி மைதானம், 1,750 ச.மீ பரப்பளவில் பயிற்சிக்கான பிரத்யேக புல்வெளி மைதானம் அமைக்கப்படும்.
மண்டலத்துக்கு ஒன்று என 5 மண்டலங்களிலும் ரூ.5 கோடி மதிப்பில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். உயிரினங்கள் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காலியாக உள்ள வஉசி உயிரியல் பூங்காவில் போட்டித் தேர்வு மாணவர்கள் படிப்பதற்காக ரூ.75 லட்சம் மதிப்பில் திறந்தவெளி படிப்பகம் ஏற்படுத்தப்படும்.
அம்ருத் 2.0 திட்டத்தில், ரூ.1.36 கோடி மதிப்பில் நரசாம்பதி குளம், ரூ.25 லட்சம் மதிப்பில் உருமாண்டம்பாளையம் குட்டை, ரூ.1.15 கோடி மதிப்பில் சின்னவேடம்பட்டி ஏரி ஆகியவை புனரமைக்கும் பணிகளும், ரூ.1.50 கோடி மதிப்பில் கிருஷ்ணாம்பதி ஏரியிலும், ரூ.3.60 கோடி மதிப்பில் குமாரசாமி ஏரியிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.92 கோடி மதிப்பில் புதியதாக டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்படும். மண்டலத்துக்கு 1 பள்ளி என 5 மண்டலங்களில் 5 பள்ளிகளில் தலா ரூ.1 கோடி மதிப்பில் ஸ்மார்ட்கிளாஸ் அமைத்து தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக வெளிநடப்பு: முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
நிகர பற்றாக்குறை ரூ.118.22 கோடி: கோவை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நிகர பற்றாக்குறை ரூ.118.22 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் வி.ப.முபசீரா பேசும்போது, ‘‘வரும் நிதியாண்டில் மாநகராட்சி வருவாய் மொத்தம் ரூ.3182.21 கோடியாகும். செலவினம் ரூ.3,300.43 கோடியாகும். இதனால் நிகர பற்றாக்குறை ரூ.118.22 கோடியாக உள்ளது.
இதில், பொது நிதி வரவினம் ரூ.1,633.37 கோடியாகவும், செலவினம் ரூ1,783.04 கோடியாகவும், குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி வரவினம் ரூ.1,441.37 கோடியாகவும், செலவினம் ரூ.1,410.04 கோடியாகவும், ஆரம்பக் கல்வி நிதி வரவினம் ரூ.107.46 கோடியாகவும், செலவினம் ரூ.107.35 கோடியாகவும் உள்ளது’’ என்றார்.