Last Updated : 21 Feb, 2018 03:41 PM

 

Published : 21 Feb 2018 03:41 PM
Last Updated : 21 Feb 2018 03:41 PM

தமிழகத்தில் நிதி நெருக்கடி தீரும் வரை பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகன திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு

தமிழகத்தில் தற்போதுள்ள நிதிப் பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை இலவச திட்டங்களை செயல்படுத்தவும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்கவும் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்செந்தூரை சேர்ந்த பி.ராமகுமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த பொதுநலன் மனு:

சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் கோவை, திருச்சி, சென்னை, மதுரை மோனோ ரயில் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் கடந்த 18 மாதங்களாக நிறைவேற்றப்படாத நிலையில் மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப் 24-ல் தொடங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம், இதில் குறைவான பணம் வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் அரசுக்கு ரூ.250 கோடி வரை செலவாகும்.

நடப்பாண்டில் ஒரு லட்சம் வாகனங்களை பெற 336104 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஏற்கெனவே இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மீண்டும் இரு சக்கர வாகனம் பெறுவதை தடுக்க விதிகள் இல்லை. பயனாளிகளின் வருமானத்தை மட்டும் கண்கிடப்பட்டுள்ளது. பயனாளிகளின் குடும்ப வருமானம் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஒருவர் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிம் வரை செலவிட தயாராக இருந்தால் அவர் பொருளாதார ரீதியில் வலுவான நிலையில் உள்ளவர். இவர்களைப் போன்றவர்களுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை. பொருளாதார ரீதியில் வலுவாக உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவது திட்டத்தின் நோக்கத்தை சீரழிப்பதாகும்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் சிறப்பு இரு சக்கரம் வாகனம் வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இத்திட்டத்தில் 2000 சிறப்பு இரு சக்கர வாகனம் வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது 50 சதவீத மானிய திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் 1.72 கோடி இலவச கலர் டிவி மற்றும் இலவச கேஸ் இணப்பு, கேஸ் அடுப்பு வழங்க  ரூ.3942 கோடி செலவிடப்பட்டது. அடுத்தவந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இலவச கிரைண்டர், மிக்சி, லேப்டாப், சைக்கிள், வேஷ்டி, சேலை வழங்க 1.20 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை வரும் மார்ச் மாதம் ரூ.3142366 கோடியாக உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே இத்திட்டத்தை ஒத்திவைக்குமாறு தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். அதற்கு பதிலளிக்காமல் திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையி்ல் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை பழைய இலவச திட்டங்களை தொடரவும், புதிய இலவச திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது என்றும், அதுவரை 50 சதவீத மானிய விலைக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x