

சென்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த அதிகாரிகள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகள், பார்வையாளர்களைக் கவர்ந்தன. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிமையத்தில், முப்படைகளில் பணியில் சேரும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், நட்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவுஅணிவகுப்பு இன்று நடைபெறுகிறது. வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
இதில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுகான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஜிம்னாஸ்டிக் சாகசத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், புகழ்பெற்ற ராணுவ தற்காப்புக் கலையைப் பயிற்சி அதிகாரிகள் நிகழ்த்திக் காட்டினர்.
பின்னர், கேரளாவின் புகழ்பெற்ற ‘களறிப்பயட்டு’ தற்காப்புக் கலையை செய்து காண்பித்தனர். மேலும், தேசியக் கொடியுடன் பிரமிடு வடிவில் வீரர்கள் பைக்கில் சென்றது, குதிரைகள் மீதுஅமர்ந்தபடியே நிகழ்த்திக் காட்டியசாகசங்கள்பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் ரசிக்கும்படி இருந்தது.
சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டிய லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுகான், அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். பயிற்சி முடித்தவீரர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சாகச நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.