

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். தொடர்ந்து, ரத்ததான முகாமை அவர் தொடங்கி வைத்து, 65-வது முறையாக ரத்ததானம் செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்த மருத்துவமனையில் இதுவரை 1,31,610 புறநோயாளிகளும் 27,776 உள்நோயாளிகளும் பயன்பெற்றுள்ளனர். 1,057 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 4,15,669 பேருக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 4,015 பேருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை, 1,345 பேருக்கு எம்ஆர்டி பரிசோதனை, 1,096 பேர் எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 3,524 பேர் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் பயன்பெற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத டபுள் பலூன் எண்டோஸ்கோப்பி எனப்படும் சிறுகுடலை ஆய்வு செய்யும் கருவி இம்மருத்துவமனையில் இருக்கிறது.
தற்போது, ரூ.10 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இன்று மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் மாரடைப்புக்கான அறிகுறிகளைக் கண்டறிவது, சிடி ஸ்கேன் எடுப்பது, ஸ்டன்ட் பொருத்துவது, ஆஞ்சியோ செய்வது, அறுவை சிகிச்சைகள் செய்வது போன்ற வசதிகளுடன் கூடிய நவீன கருவி ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவியும் தென்னிந்தியாவிலேயே எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் இல்லாத கருவி ஆகும்.
மேலும் பல் சிகிச்சைகளுக்கு சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் கோன் பீம் சிடி கருவி ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீனபல் மருத்துவ உபகரணங்களும் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணி, கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் பார்த்தசாரதி, மருத்துவமனை ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.