உலக மகளிர் தின கொண்டாட்டம்: அவ்வையார் படத்துக்கு ஆளுநர், தலைவர்கள் மரியாதை

உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள அவ்வையாரின் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள அவ்வையாரின் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Updated on
1 min read

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் அவ்வையார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ‘பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்’ என்ற கருப்பொருளுடன் உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்ப்புலவர் அவ்வையாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகேஅலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசின் சார்பில் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் சிலைக்கு அருகே அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கோயம்பேட்டில் நடைபெற்ற தேமுதிக மகளிர் அணிநிர்வாகிகள் கூட்டத்தில், புதுச்சேரியில் மரணமடைந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, ‘தமிழகத்தில் பெண்களை போற்றுவோம், அவர்களைக் காப்போம்’ என்றஉறுதிமொழியும் எடுக்கப்பட்டது. எழும்பூரில் மதிமுக மகளிர் அணி தலைமையில் நடந்த உலக மகளிர் தின விழாவில் பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் வேளச்சேரி அலுவலகத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி, கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் பாலின சமத்துவத்தை வென்றெடுக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற உலக மகளிர்தின விழாவில், மேயர் பிரியா, 25 மகளிர் அலுவலர்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

மகளிர் தினத்தையொட்டிமுதல்வர் மு.க.ஸ்டாலின்வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நூற்றாண்டுகளாகத் தமக்கு விதிக்கப்பட்ட மடமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியேறி, புத்துலகின் சிற்பிகளாக மிளிர்ந்திட உலக மகளிர் நாளில் அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகள்.

பெண்களின் சமூக பொருளாதார ஏற்றத்துக்கும், அரசியல் பங்கேற்புக்கும் அடித்தளம் அமைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு தீட்டி வருகிறது. சொற்களால் அல்லாமல், பெண்களைச் சக மனிதர்களாக, சமவுரிமை கொண்டவர்களாக மதிப்பதன் வழியே அவர்களைப் போற்றும் தலைமுறை உருவாகிட உழைப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மநீம தலைவர்கமல்ஹாசன், தவெக தலைவர்விஜய், நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in