

சென்னை: மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில்அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு உயர்த்தப்படவில்லை. 2023-ம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வையே கடந்த அக்டோபர் மாதத்தில்தான் தமிழக அரசு அறிவித்தது.
அதேபோல, தமிழகஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தற்போதும் தாமதப்படுத்தக் கூடாது.எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பாக அமைச்சரவையைக்கூட்டி, 4 சதவீத அகவிலைப்படி உயர்வைவழங்குவதாக அறிவிக்க வேண்டும். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: காலி் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குகூட தமிழக அரசு செவிசாய்க்க மறுப்பது கண்டனத்துக்குரியது.
எனவே, மக்களவைதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி, ஜன.1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். மேலும், போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.