

சென்னை: அதிமுக சார்பில் தேர்தல் ஆவணங்களில் அவைத் தலைவர் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கட்சியின் உறுப்பினர்கள் பா.ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிச்சாமி ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ராம்குமார் ஆதித்தன் கூறியதாவது: 2022-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளுக்கு முரணாக விதிகளை திருத்தம் செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் படிவங்களில் கையொப்பமிட தன்னை இடைக்கால பொதுச் செயலராக பொதுக்குழு தேர்வு செய்ததை அங்கீகரித்து திருத்தப்பட்ட கட்சி விதிகளை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், பழனிசாமி கோரிக்கையை நிராகரித்தது. அவருக்கு பதிலாக அதிமுகவின் தேர்தல் படிவத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளித்தது. அதை ஏற்று இரட்டை இலை சின்னத்தை அதிமுக வேட்பாளருக்கு வழங்க தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாகவும், பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிப்பதாகவும், ஆனால், அவை நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் அளித்த பதிலுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நலன் கருதி அவர்களுக்கு எவ்வித சட்டச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, ஏற்கெனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் அவைத் தலைவருக்கு உரிய அதிகாரம் அளித்ததுபோல் தகுந்த உத்தரவு பிறப்பிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.