

சென்னை: கடந்த 2006-10 காலகட்டத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது ரூ. 44.59 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோரை விடுவித்துஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளீதரும், அவரது மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது அவர்கள், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்ததில் எந்த தவறும் இல்லை. அதை ஆராய்ந்து இந்த வழக்கில் இருந்து 3 பேரையும் விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பும் சட்டவிரோதமானது அல்ல. கீழமை நீதிமன்றங்கள் தவறான முடிவுகளை எடுத்து இருந்தால் மட்டுமே தாமாக முன்வந்து மறுஆய்வு செய்ய முடியும். சொத்துகள் தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு செலவழிக்கப்பட்ட மருத்துவ செலவினங்களை அவரது சம்பந்தி செலுத்தியுள்ளார். பின்னர் அந்த தொகையை அரசுதிருப்பி செலுத்தியுள்ளது. அந்ததொகையையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் கொள்ளவில்லை என வாதிட்டனர்.
அதையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்துக்காக இந்த வழக்கை வரும் மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.