Published : 09 Mar 2024 06:05 AM
Last Updated : 09 Mar 2024 06:05 AM

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களின் கேலிக்கூத்துகள்!

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பி.எம். சரவணன் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது கூட்ட அரங்கில் காலியாக இருந்த இருக்கைகள். | படம்: அ.அருள்தாசன் |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பலரின் நடவடிக்கைகளால் திட்டப் பணிகளுக்கான தீர்மானங்களை நிறைவேற்ற முடியவில்லை. கூட்டத்தை நடத்த முடியாமல் மேயர் பி.எம். சரவணன் திணறும் நிலையில், அதிகாரிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணனுக்கும் பாளையங்கோட்டை திமுக எம்.எல்.ஏ. அப்துல்வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் இந்த பூசல் எதிரொலித்து வருவதால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பிக்கும் நிலை நீடிக்கிறது.

அப்துல்வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். மாநகராட்சி கூட்டங்களையும் சரிவர நடத்த முடியவில்லை. பல்வேறு திட்டப்பணிகளுக்கான தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் பணிகள் முடங்கியிருக்கின்றன.

திருநெல்வேலி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், அவசர மற்றும் சாதாரண கூட்டம் கடந்த 28-ம் தேதி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டத்துக்கு வெறும் 4 கவுன்சிலர்களே வந்ததால் வேறுவழியின்றி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் மாநகராட்சி 7-வது வார்டில் எந்த பணிகளையும் செய்ய முடியவில்ல என்று தெரிவித்து திமுக கவுன்சிலர் இந்திரா மணி, மாநகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தது பரபரப்பை உருவாக்கியிருந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டம் மற்றும் சாதாரண, அவசர கூட்டங்கள் நேற்று நடைபெறும் என்று மேயர் அறிவித்திருந்தார். இதற்காக மாமன்ற கூட்ட அரங்கில் அவரும், துணைமேயர் கே.ஆர். ராஜு, ஆணையர் தாக்கரே ஆகியோரும் காலை 10.30 மணியிலிருந்து காத்திருந்தனர்.

5 திமுக, 2 காங்கிரஸ்,1 அதிமுக கவுன்சிலர் என்று 8 பேர் மட்டுமே வந்திருந்ததால் கூட்டத்தை நடத்த முடியவில்லை. 2 திமுக கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்றனர். 1 மணிநேரமாக மேயரும், துணை மேயரும், அதிகாரிகளும் காத்திருந்தும் கூட்ட அரங்குக்கு வராமல் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி வளாகத்தில் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரையும் மேயர் செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துகொண்டிருந்தார். பலர் அவரது செல்போன்அழைப்பை எடுக்காமல் புறக்கணித்தனர். மேயர் சரவணன் இருக்கும் வரை இந்தகூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என சில திமுக கவுன்சிலர்கள் ஆடியோ பதிவை வாட்ஸ் அப்பில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், காலை 11.20 மணிக்கு திமுக மேலிடத்தின் உத்தரவின்பேரில் திமுககவுன்சிலர்கள் கூட்ட அரங்குக்கு வந்தனர். பட்ஜெட் கூட்டத்தில் மட்டும் நாங்கள் பங்கேற்போம். சாதாரண மற்றும் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்துக்கான பதிவேட்டில் மட்டுமே அவர்கள் கையெழுத்திட்டனர். வழக்கமாக திருக்குறளை வாசித்து கூட்டத்தை மேயர் தொடங்கி வைப்பார். அதன்படி மேயர் திருக்குறளை வாசிக்க தொடங்கியபோது திமுக கவுன்சிலர் ரவீந்திரன் அலட்சியமாக பேசிக்கொண்டு, மற்ற கவுன்சிலர்களுடன் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினார். இதனால், திருக்குறளை வாசிக்காமல் சிறப்பு தீர்மானங்களை மேயர் வாசித்தார்.

திமுக தலைவர், அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானங்களை மேயர் கொண்டுவந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் திமுக கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனை கண்டுகொள்ளாமல் மேயர் நன்றி தீர்மானத்தை வாசித்துக் கொண்டே இருந்தார்.

தொடர்ந்து பட்ஜெட்டிலுள்ள முக்கிய விவரங்களை மேயர் வாசித்தபோது கூட்ட அரங்கில் 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 8 கவுன்சிலர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதனால் சாதாரண மற்றும்அவசர கூட்டங்களை நடத்த முடியவில்லை. இந்த கூட்டங்களில் கொண்டுவர திட்டமிட்டிருந்த பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x