Published : 08 Mar 2024 10:42 AM
Last Updated : 08 Mar 2024 10:42 AM

மார்ச் 22-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி

பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். 2-வது முறையாக ஜனவரி 19-ம் தேதி தமிழகம் வந்த அவர், சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். 20, 21-ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

3-வது முறையாக பிப்ரவரி 27-ம் தேதி பல்லடத்தில் நடந்த ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும், மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 28-ம் தேதி தூத்துக்குடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.4-வது முறையாக கடந்த 4-ம் தேதி தமிழகம் வந்த மோடி, கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்நிலையில், இந்த ஆண்டில் 5-வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. விரைவில் 2-ம் கட்ட பட்டியலை வெளியிடுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இதில், தமிழக வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், வரும் 22-ம் தேதி மோடி தமிழகம் வர உள்ளதாகவும், குறிப்பாக கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x