

புதுச்சேரி: சிறுமி கொலையை கண்டித்து இன்று (மார்ச்.8) எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதால் பஸ், டெம்போ ஓடவில்லை. பொதுத்தேர்வு எழுதுவோர் பாதிக்காமல் இருக்க பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டன.
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டப்பேரவை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், காவல்நிலையம் முற்றுகை என பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். ஐந்து பேரிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது. சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி இறுதிச் சடங்குகள் நடந்தன.
அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து இன்று பந்த் போராட்டத்தை இண்டியா கூட்டணி, அதிமுக பந்த் போராட்டத்தை தனித்தனியாக அறிவித்தன. அதேபோல் அரசு ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, சமூக அமைப்பினரும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
புதுச்சேரியின் முக்கிய பெரிய மார்க்கெட் குபேர் மார்க்கெட், மீன் அங்காடி மூடப்பட்டிருந்தது. கடைகள் காலையில் திறக்கவில்லை. முக்கிய வணிக வீதிகளான நேருவீதி, காந்தி வீதியிலும் கடைகள் திறக்கப்படவில்லை.
புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்கால் என வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக பஸ்கள் எல்லைப்பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். புதுவையை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் உள்ளூர் பஸ்கள் சில இயங்கின. இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடவில்லை.
சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரிவித்துள்ளனர்.பல பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
பொதுத்தேர்வு நடப்பதால் அதை பாதிக்காமல் பள்ளி பஸ்கள், வாகனங்கள் இயங்கின. கல்லூரிகள் இயங்கின. அதற்கான பேருந்துகள் ஓடின. சுற்றுலா வந்தோர், மருத்துவமனை, அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர். பலரும் வெகுநேரம் காத்திருந்தும் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காததால் அவதி அடைந்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், ”போராட்டம் மிக முக்கியமானது. ஆதரவு தெரிவிக்கிறோம். நிறுவனங்கள், கல்லூரிகள் விடுமுறை விடாததால் பணிக்குச் செல்ல சூழல் ஏற்பட்டு சிரமம் அடைந்தோம்” என்றனர். திரையரங்குகளில் காலை, மதியம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நகர் முழுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முத்தியால்பேட் பகுதியில் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முத்தியால்பேட் மணிக்கூண்டு பகுதியில் பேனர் வைத்து மக்கள் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.
பந்த் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவினர் மாநில செயலர் அன்பழகன் தலைமையில் அண்ணாசிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர். ராஜா திரையரங்கு அருகே இண்டியா கூட்டணியினர் காலையில் போராட்டம் நடத்தவுள்ளனர்.