

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிப்புதூர் கிராமத்தில், மதுரை- நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில், தமிழகத்திலேயே அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நத்தம் அருகேயுள்ள வத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கழிவுநீர் வாகன ஓட்டுநர்லோகேஷ் (27), தனது வாகனத்துடன் மதுரைக்குப் புறப்பட்டார். பரளிப்புதூர் சுங்கச்சாவடிக்குச் சென்றபோது, ஊழியர்கள் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர். கட்டணம் செலுத்த மறுத்த லோகேஷ், ` இந்த ஏரியாக்காரனிடமே கட்டணம் கேட்கிறீர்களா?' என்று கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது வாகனத்தை அனுமதிக்க சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து லோகேஷ் வத்திப்பட்டிக்குச் சென்று ஆட்களை அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனங்களில் சுங்கச்சாவடிக்கு வந்தார். அங்கிருந்த தடுப்புகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அக்கும்பல் சேதப்படுத்தியது. மேலும், சுங்கச்சாவடி பகுதியில் இரு சக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி, வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து, ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் நத்தம் போலீஸார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வத்திப்பட்டியைச் சேர்ந்த வடிவேல்(25), விஜய்(24) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், 5 பேரைத் தேடி வருகின்றனர்.