சேவா பாரதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க யூ-டியூப் சேனலுக்கு உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சேவா பாரதி தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவரான வழக்கறிஞர் ரபு மனோகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ்-ன் அங்கமான எங்களது சேவா பாரதி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகிறோம். இதனால் எங்கள் அமைப்புக்கு, மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. இந்நிலையில், ‘கருப்பர் தேசம்’ என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வரும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், சேவா பாரதி அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் போலீஸாரால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்குடன் சேவாபாரதி அமைப்பை தொடர்புபடுத்தி, பொய் தகவலைப் பரப்பி வீடியோ பதிவிட்டுள்ளார். எனவே, அவர் எங்கள் அமைப்புக்கு 1 கோடியே ஆயிரம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், "மனுதாரர் கோரியுள்ள ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை நஷ்டஈடாக, வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 6 சதவீத வட்டியுடன் ‘கருப்பர் தேசம்’ யூ-டியூப் சேனலை நிர்வகித்து வரும் சுரேந்திரன், சேவா பாரதி அறக்கட்டளை அமைப்புக்கு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டதுடன், சேவா பாரதி அமைப்பு குறித்து சுரேந்திரன் பேசுவதற்கு தடை விதித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in